ஒன்பதாம் வகுப்பு – புதிய சமச்சீர் கல்வி
புவியியல்
அலகு – 4
நீர்க்கோளம்
4.1 நீர்க்கோளம்
1. இயற்கை வளங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் தவிர்க்க இயலாத ஒன்றாகவும் விளங்குவது?
விடை: நீர்
2. “நீலக்கோளம்” என்று அழைக்கப்படுவது?
விடை: புவிக்கோளம்
3. புவிக்கோளம், “நீலக்கோளம்” என்று ஏன் அழைக்கப்படுகிறது?
விடை: புவிக்கோளத்தில் நீர்வளம் மிகுந்து காணப்படுவதால்
4. புவியில் காணப்படும் நீரின் பல்வேறு நிலைகளை உள்ளடக்கியது?
விடை: நீர்க்கோளம்
5. நீர்க்கோளம் என்பது?
விடை : புவியின் அனைத்து நீர் நிலைகளையும் தன்னுள் கொண்டது நீர்க்கோளம் ஆகும்.
6. புவியின் மேற்பரப்பில் கடல் நீராக இருக்கும் நீரின் சதவீதம்?
விடை : 97 சதவிகிதம்
7. புவியின் மேற்பரப்பில் 3 சதவிகித நீரானது எப்படி காணப்படுகிறது?
விடை: பனிப்பாறைகளாகவும், பனி முகடுகளாகவும் ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களாகவும், நிலத்தடி நீராகவும், ஒரு சிறு பகுதி காற்றில் நீராவியாகவும் காணப்படுகிறது.
4.2 நீர்ச் சுழற்சி
8. புவியில் நீரின் தன்மை?
விடை : நீரானது, நிலைத்த தன்மையற்ற, நகரும் தன்மையுடையதாகும்.
9. புவியில் நீரியல் சுழற்சி என்பது?
விடை: புவியின் மீது மேலும், கீழும் நீரின் இயக்கம் தொடர்ச்சியாக நடைபெறுவதே நீரியல் சுழற்சி எனப்படும்.
10. புவியில் நீர்ச் சுழற்சியின் முக்கிய செயல்பாடுகள் எவை?
விடை: ஆவியாதல், நீர்சுருங்குதல் மற்றும் மழைப்பொழிவு
11. புவியில் தன் நிலையைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருப்பது?
விடை: நீர் (எ.கா.பனிக்கட்டி, நீர், நீராவி).
12. புவியில் நீரானது தன் நிலையைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருப்பது எப்படி நடைபெறலாம்?
விடை: கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெறலாம் அல்லது மில்லியன் ஆண்டுகள் நடைபெறலாம்.
13. புவியில் காணப்படும் நீர்வளத்தினை எத்தனை பிரிவுகளாக பிரிக்கலாம்?
விடை: நன்னீர் மற்றும் உவர்நீர் என இருபிரிவுகளாகப் பிரிக்கலாம்.
4.3 நன்னீர்
14. புவியில் நன்னீர் என்று அழைக்கப்படுவது?
விடை: மழைநீர்
15. புவியில் மழைநீர் ஏன் நன்னீர் என்று அழைக்கப்படுகிறது?
விடை: பெருங்கடல் மற்றும் கடல் நீரோடு ஒப்பிடும்போது உவர்ப்பின் சதவீதம் மழைநீரில் மிகக்குறைவாக இருப்பதால், மழைநீர் தூய்மையான நீராகக் கருதப்படுகிறது. இதனால் மழைநீர் நன்னீர் என்று அழைக்கப்படுகிறது.
16. புவியில் நன்னீரின் பெரும் பகுதி எப்படி காணப்படுகிறது?
விடை: உறைந்த நிலையில் பனிக்கவிகைகளாகவும், (Icecap) பனியாறுகளாகவும் (Glaciers) காணப்படுகிறது.
17. புவியின் நன்னீரில் சுமார் 1% அளவு நீரானது எப்படி காணப்படுகிறது?
விடை: ஆறுகள், நீரோடைகள், ஏரிகள் மற்றும் குளங்களில் நீர்ம நிலையில் காணப்படுகிறது.
18. புவியில் நிலத்தடி நீர் எப்படி உருவாகிறது?
விடை : புவியின் மேற்பரப்பில் உள்ள நீரானது நீர்க்கொள் பாறைகள் வழியாக ஊடுருவிச் சென்று நிலத்தின் அடியில் சேமிக்கப்படுகிறது. இது நிலத்தடி நீர் என்று அழைக்கப்படுகிறது.
4.4 பெருங்கடல்கள்
19. கண்டங்கள் மற்றும் கடல்கள் புவியின் வட மற்றும் தென் அரைக்கோளங்களில் எப்படி பரவி உள்ளன?
விடை : ஒரே சீராகப் பரவியிருக்கவில்லை.
20. புவியின் வட அரைக்கோளம் எத்தனை சதவீதம் நிலப்பரப்பை கொண்டுள்ளது?
விடை: 61%
21. புவியின் தென் அரைக்கோளம் எத்தனை சதவீதம் நீர் பரப்பை கொண்டுள்ளது?
விடை: 81%
22. நிலம் மற்றும் நீர்ப்பரவலின் அடிப்படையில் புவியின் வட அரைக்கோளம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை : நில அரைக்கோளம்
23. நிலம் மற்றும் நீர்ப்பரவலின் அடிப்படையில் புவியின் தென் அரைக்கோளம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: நீர் அரைக்கோளம்
24. புவிக்கோளத்தின் வளகிண்ணமாகக் கருதப்படுவது?
விடை: கடல்களும் பெருங்கடல்களும்
25. கடல்களும் பெருங்கடல்களும் புவிக்கோளத்தின் வளகிண்ணமாகக் கருதப்படுவதற்கான காரணம்?
விடை: அதிக அளவிலான உணவு மற்றும் கனிம வளங்களைக் கொண்டிருப்பதால் கடல்களும் பெருங்கடல்களும் புவிக்கோளத்தின் வளகிண்ணமாகக் கருதப்படுகிறது.
4.4.1 கடலடி நிலத்தோற்றங்கள்
26. புவியின் கடலடிப் பரப்பில் பல்வேறு விதமான நிலத் தோற்றங்கள் காணப்படுகின்றன.
அவையாவன?
விடை:
அ. கண்டத்திட்டு (Continental shelf)
ஆ. கண்டச்சரிவு (Continental slope)
இ. கண்ட உயர்ச்சி (Continental rise)
ஈ. கடலடி சமவெளிகள் அல்லது அபிசல் சமவெளி (Deep sea Flair / Abyssal Flair)
உ கடல் பள்ளம் அல்லது அகழிகள் (Ocean deep)
ஊ கடலடி மலைத்தொடர்கள் (Oceanic ridge)
அ. கண்டத்திட்டு
27. புவியின் கண்டத்திட்டு என்பது?
விடை : நிலத்திலிருந்து கடலை நோக்கி மென்சரிவுடன் கடலில் முழ்கியுள்ள ஆழமற்ற பகுதியே கண்டத்திட்டு எனப்படுகிறது.
28. பெரும்பாலும் புவியின் கண்டத்திட்டு பகுதிகள் எப்படி காணப்படுகிறது?
விடை: மென்சரிவைக் கொண்ட சீரான கடற்படுகையாகும்.
29. புவியின் கண்டத்திட்டில் சூரிய ஒளி நன்கு ஊடுருவிச் செல்வதற்கு காரணம்?
விடை: கண்டத்திட்டு ஆழமற்ற பகுதியாக இருப்பதினால் சூரிய ஒளி நன்கு ஊடுருவிச் செல்கிறது.
30. புவியின் கண்டத்திட்டு எவை நன்கு வளர்வதற்குச் சாதகமாக உள்ளது?
விடை: கடற்புற்கள், கடற்பாசி மற்றும் பிளாங்டன் போன்றவை வளர்வதற்கு
31. உலகின் செழிப்பான மீன்பிடித்தளங்களுள் ஒன்றாக உள்ள பகுதி?
விடை: புவியின் கண்டத்திட்டு பகுதிகள்
32 புவியின் கண்டத்திட்டு பகுதியில் அமைந்துள்ள செழிப்பான மீன்பிடித்.தளங்களுக்கான எடுத்துக்காட்டு?
விடை: நியூபவுண்ட்லாந்தில் உள்ள ‘கிராண்ட் பாங்க்’ (The Grand Bank).
33. புவியின் கண்டத்திட்டுகள் கொண்டிருப்பது?
விடை : மிக அதிக அளவு கனிமங்களையும் எரிசக்தி கனிமங்களையும் கொண்டுள்ளது.
34. புவியில் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் எண்ணெய் எடுப்பதற்கும் சுரங்க நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் சிறந்த இடமாக விளங்குவது?
விடை : கண்டத்திட்டு பகுதி
35. புவியில் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் எண்ணெய் எடுப்பதற்கு உதாரணம்?
விடை: அரபிக் கடலில் அமைந்துள்ள ‘மும்பைஹை’.
ஆ. கண்டச்சரிவு
36. புவியின் கண்டச் சரிவு என்பது?
விடை: கண்டத்திட்டின் விளிம்பிலிருந்து வன் சரிவுடன் ஆழ்கடலை நோக்கிச் சரிந்து காணப்படும் பகுதியே கண்டச்சரிவாகும்.
37. புவியின் கண்ட மேலோட்டிற்கும், கடலடி மேலோட்டிற்கும் இடையில் ஒரு எல்லையை உருவாக்குவது?
விடை: கண்டச் சரிவு
38. புவியின் கண்டச் சரிவில் ஏன் படிவுகள் காணப்படுவதில்லை?
விடை: வன்சரிவினைக் கொண்டிருப்பதால்
39. புவியில் கண்டச் சரிவு பகுதியின் சிறப்பம்சங்கள்?
விடை: கடலடிப் பள்ளத்தாக்குகள் மற்றும் அகழிகள் காணப்படுவது.
40. புவியின் கண்டச் சரிவில் வெப்பநிலை மிகக்குறைவாக இருப்பதற்கான காரணம்?
விடை: சூரிய ஒளி மிகக் குறைந்த அளவே ஊடுருவிச் செல்வதால் வெப்பநிலை மிகக்குறைவாகவே உள்ளது.
41. புவியின் கண்டச் சரிவு பகுதியில் வாழும் கடல்வாழ் உயிரினங்களில் வளர்சிதை மாற்றம் எப்படி நடைபெறுகிறது?
விடை: மெதுவாகவே நடைபெறுகிறது.
இ. கண்ட உயர்ச்சி
42. புவியில் கண்டச்சரிவின் தரைப்பகுதி எப்படி காணப்படுகின்றன?
விடை: மென்சரிவைக் கொண்ட படிவுகள் காணப்படுகின்றன.
43. புவியின் கண்ட உயர்ச்சி என்பது?
விடை: கண்டச் சரிவிற்கும் கடலடிச் சமவெளிக்கும் இடையில் காணப்படும் நிலத்தோற்றமே கண்ட உயர்ச்சி ஆகும்.
44. புவியின் நிலத்தில் காணப்படும் வண்டல் விசிறிகளைப் போன்றே கடலடியிலும் வண்டல் விசிறிகளை கொண்டுள்ள பகுதி?
விடை : கண்ட உயர்ச்சி பகுதி
ஈ. ஆழ்கடல் சமவெளி
45. புவியில் ஆழ்கடல் சமவெளியின் வேறு பெயர்?
விடை: அபிசெல் சமவெளி
46. புவியில் ஆழ்கடல் சமவெளி அல்லது அபிசெல் சமவெளி என்பது?
விடை : ஆழ்கடலில் காணப்படும் கடலடிச் சமவெளி ஆகும்.
47. புவியில் ஆழ்கடல் சமவெளியின் பரவல்?
விடை: கண்ட உயர்ச்சியிலிருந்து மத்தியக் கடலடி மலைத்தொடர்கள் வரை பரவி உள்ளது.
48. புவியில் ஆழ்கடல் சமவெளியின் தோற்றம்?
விடை : சீராக உள்ள எவ்விதத் தோற்றங்களும் அற்ற மென்சரிவைக் கொண்ட பகுதியாகும்.
49. புவியில் ஆழ்கடல் சமவெளி எப்படி உருவானது?
விடை : ஆறுகளினால் கொண்டுவரப்பட்ட களிமண், மணல் மற்றும் வண்டல்களால் உருவாக்கப்பட்ட அடர்ந்த படிவுகளால் ஆனது.
50. புவியில் ஆழ்கடல் சமவெளியின் தனித்துவம் வாய்ந்த நிலத்தோற்றங்கள் எவை?
விடை : அபிசல் குன்றுகள், கடல் குன்றுகள், கடல்மட்ட குன்றுகள், பவளப்பாறைகள் மற்றும் வட்டப்பவளத்திட்டுகள் (Atolls) ஆகியன ஆழ்கடல் சமவெளியின் தனித்துவம் வாய்ந்த நிலத்தோற்றங்களாகும்.
கடலடிப் பள்ளம் / அகழிகள்
51. புவியில் கடலடிப் பள்ளத்தின் வேறு பெயர்?
விடை : அகழிகள்
52. புவியில் பெருங்கடலின் மிக ஆழமானப் பகுதி?
விடை: அகழி
53. புவியில் கடலடிப் பள்ளம் மொத்தக் கடலடிப் பரப்பில் எத்தனை சதவீதத்திற்கு மேல் காணப்படுகிறது?
விடை : 7 சதவீதத்திற்கு மேல்
54. புவியின் அகழியில் நீரின் வெப்பநிலை எப்படி இருக்கும்?
விடை : உறைநிலையை விட சற்று அதிகமாக இருக்கும்.
55. படிவுகள் ஏதும் இல்லாததினால், பெரும்பாலான புவியின் அகழிகள் வன்சரிவுடன் எந்த வடிவத்தில் காணப்படுகின்றன?
விடை: ‘V’
56. பெரும்பாலும் வலிமையான நில அதிர்வுகளின், நிலநடுக்க மேல் மையப்புள்ளி (Epicentre) புவியில் எங்கு காணப்படுகின்றது? விடை: கடலடிப் பள்ளத்தில் காணப்படுகின்றது.
ஊ. கடலடி மலைத் தொடர்கள்
57. புவியில் கடலடி மலைத் தொடர்கள் என்பது?
விடை : கடலடியில் காணப்படும் தொடர்ச்சியான மலைத்தொடர்கள் கடலடி மலைத் தொடர்கள் எனப்படுகின்றன.
58. புவியில் கடலடி மலைத் தொடர்கள் எப்படி உருவாகின்றன?
விடை: இரண்டு நிலத்தட்டுகள் விலகிச் செல்வதினால் உருவாகின்றன.
59. புவியில் கடலடி மலைத் தொடர்கள் எந்த பாறைகளால் ஆனவை?
விடை: இளம்பசால்ட் பாறைகளால் ஆனவை.
60. புவி நிலத்தோற்றங்களில் கடலடி மலைத் தொடர்கள் எப்படி காணப்படும்?
விடை: மிக விரிந்தும் தனித்தும் காணப்படும் நிலத்தோற்றமாகும்.
61. புவியில் கடலடி மலைத் தொடர்களுள் அறியப்பட்டவைகள் எவை?
விடை: மத்திய அட்லாண்டிக் மலைத் தொடரும், கிழக்கு பசிபிக் மலைத் தொடரும் நன்கு அறியப்பட்டவைகளாகும்.
பெருங்கடல் நீரின் இயக்கங்கள் (Movement of the Ocean Water)
62. புவியில் கடல் நீரானது எந்த நிலையில் இருக்கிறது?
விடை : இயங்கிக் கொண்டே இருக்கிறது.
63. புவியில் பெருங்கடல் நீரின் இயக்கங்கள் தொடர்ந்து கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் நடைபெறக் காரணமாக இருப்பவை எவை?
விடை: வெப்பநிலை, உவர்ப்பியம், அடர்த்தி, சூரியன், நிலவின் ஈர்ப்பு சக்தி மற்றும் காற்று போன்றவை ஆகும்.
(அ) அலைகள் (Waves)
64. புவியில் கடல் நீர் இயக்கங்களில் மிகவும் வலிமை வாய்ந்தவையாகக் கருதப்படுவது?
விடை: அலைகள்
65. புவியில் காற்று சிற்றலைகளை எப்படி உருவாக்கின்றன?
விடை: கடலின் மேற்பரப்பில் வீசும்போது சிற்றலைகளை உருவாக்கின்றன.
66. புவியில் அலைகளின் உயரம் எதைப் பொறுத்து அமைகின்றது?
விடை: காற்றின் வேகம், அது நீடிக்கும் காலம் மற்றும் அதன் திசையைப் பொறுத்து அலைகளின் உயரம் அமைகின்றது.
67. புவியின் ஆழ் கடலில் அலைகள் எப்படி உருவாகின்றன?
விடை: சில நேரங்களில் ஆழ்கடலில் ஏற்படும் நில அதிர்வுகளினாலும் அலைகள் உருவாகின்றன.
68. புவியின் ஆழ்கடலில் உருவாகும் அலைகள் எப்படி இருக்கும்?
விடை: அதிக சேதத்தை ஏற்படுத்தும் ஆழிப்பேரலைகளாகும் (Tsunami).
(ஆ) ஓதங்கள் (Tides)
69. புவியின் ஓதங்கள் என்பது?
விடை : சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசையின் காரணமாக ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கடல்நீர் உயர்ந்து தாழ்வது ஓதங்கள் எனப்படுகின்றன.
70. புவியின் ஓதங்கள் எத்தனை வகைப்படும்?
விடை : இரண்டு. அவை
உயர் ஓதங்கள் (Spring tides) மற்றும் தாழ் ஓதங்கள் (Neap tides) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
71. புவியில் உயர் ஓதங்கள் எப்படி உருவாகின்றன?
விடை: புவி, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்பொழுது, சூரியன் மற்றும் சந்திரனின் கூட்டு ஈர்ப்பு விசையானது கடலின் மேற்பரப்பு அலைகளை வலுவடையச் செய்து உயர் அலைகளை உருவாக்குகின்றன. இவ்வுயரமான அலைகளால் உயர் ஓதங்கள் ஏற்படுகின்றன.
72. புவியில் உயர் ஓதங்கள் எந்த தினங்களில் ஏற்படுகின்றன?
விடை: அமாவாசை மற்றும் முழு நிலவு தினங்களில் ஏற்படுகின்றன.
ஓதங்களின் வகைகள்
73. விடை: புவி, சூரியன் மற்றும் சந்திரன் செங்குத்துக் கோணத்தில் வரும்போது இவற்றின் ஈர்ப்பு விசையானது ஒன்றுக்கொன்று எதிராகச் செயல்படுவதினால் உயரம் குறைவான அலைகள் உருவாகின்றன. இவ்வுயரம் குறைவான அலைகள், தாழ் ஓதங்கள் எனப்படுகின்றன.
74. புவியில் இரண்டு உயர் ஓதங்களுக்கு இடையே ஏற்படுவது?
விடை: தாழ் ஓதங்கள்
75. புவியில் தாழ் ஓதங்கள் எப்போது ஏற்படுகின்றன?
விடை: சந்திரனின் முதல் மற்றும் இறுதி கால் பகுதியில் அதாவது மாதத்தில் இரண்டு முறை தாழ் ஓதங்கள் ஏற்படுகின்றன.
(இ) கடல் நீரோட்டங்கள்
76. புவியில் கடல் நீரோட்டம் என்பது?
விடை: பெருங்கடல்களின் மேற்பரப்பிலும் அதன் அடி ஆழத்திலும் ஒரு குறிப்பிட்ட திசையில் நகரும் நீரினை கடல் நீரோட்டம் என்று அழைக்கின்றோம்.
77. பெருங்கடல் நீரோட்டங்கள் புவியின் வட அரைக்கோளத்தில் எந்த திசையில் நகருகின்றன?
விடை : கடிகார திசையில்
78. பெருங்கடல் நீரோட்டங்கள் புவியின் தென் அரைக்கோளத்தில் எந்த திசையில் நகருகின்றன?
விடை : கடிகார திசைக்கு எதிர் திசையிலும் நகருகின்றன.
79. புவியில் கடல் நீரோட்டங்களை உருவாக்கும் காரணிகள் எவை?
விடை:
புவியின் சுழற்சி
வீசும் காற்று
கடல் நீரின் வெப்பம் மற்றும் உவர்ப்பியத்தில் உள்ள வேறுபாடு
80. புவியில் கடல் நீரோட்டங்கள் வெப்பத்தின் அடிப்படையில் எப்படி வகைப்படுத்தப்பட்டுள்ளன?
விடை: வெப்ப நீரோட்டம் மற்றும் குளிர் நீரோட்டம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
81. புவியில் வெப்ப நீரோட்டங்கள் என்பது?
விடை: தாழ் அட்சக்கோட்டுப் பகுதிகளிலிருந்து (வெப்ப மண்டலம்) உயர் அட்சக் கோட்டுப் பகுதிகளை (மிதவெப்ப மண்டலம், துருவ மண்டலம்) நோக்கி நகரும் நீரோட்டங்கள் வெப்ப நீரோட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.
82. புவியில் வெப்ப நீரோட்டத்திற்கு எடுத்துக்காட்டுகள் எவை?
விடை: அட்லாண்டிக் பெருங்கடலின் கல்ஃப் வளைகுடா நீரோட்டம் மற்றும் பசிபிக் பெருங்கடலின் வட பசுபிக் புவியிடைக் கோட்டு நீரோட்டம் ஆகும்.
83. புவியில் குளிர் நீரோட்டங்கள் என்பது?
விடை: உயர் அட்சப் பகுதிகளிலிருந்து (மிதவெப்ப மண்டலம் மற்றும் துருவ மண்டலம்) தாழ் அட்சப்பகுதிகளை (வெப்ப மண்டலம்) நோக்கி நகரும் நீரோட்டங்கள் குளிர் நீரோட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.
84. புவியில் குளிர் நீரோட்டத்திற்கு எடுத்துக்காட்டுகள் எவை?
விடை: அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள லாப் ரடார் நீரோட்டம் மற்றும் பசிபிக் பெருங்கடலின் பெருவியன் நீரோட்டம் ஆகும்.
4.5 கடல் வளங்கள்
85. புவியில் கடல் வளங்கள் என்பது?
விடை: கடல் நீர் மற்றும் கடலில் அடிப்பகுதியில் காணப்படக்கூடிய உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளை நாம் கடல் வளங்கள் என்கிறோம்.
86. புவியில் கடல் வளங்கள் எதற்கு முக்கியப் பங்காற்றுகின்றன?
விடை: சமூகத்தின் நீடித்த தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன.
87. பலதரப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் புவியில் எதற்கு பயன்படுகின்றன?
விடை: உணவு, மருத்துவம், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தொழிற்துறைகளில் பயன்படுகின்றன.
88. புவியில் ஆற்றல், கனிமவளம் மற்றும் நீர் ஆகியவற்றின் உலகத்தேவைகள் எதை சார்ந்துள்ளன?
விடை: உயிரற்ற கடல் வளங்களையே அதிகம் சார்ந்துள்ளன.
89. புவியின் கடல் வளங்களில் ஆற்றல் வளங்கள் என்பவை?
விடை: எரிசக்தி கனிமங்கள், ஓத ஆற்றல், அலை ஆற்றல்.
90. புவியின் கடல் வளங்களில் கனிம வளங்கள் என்பவை?
விடை: பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, உலோக தாதுக்கள், மணல், சரளை கற்கள்
91. புவியின் கடல் வளங்களில் உயிரியல் வளங்கள் என்பவை?
விடை: மீன்கள், பிளாங்டன், கடற் புற்கள், பவளப்பாறைகள்
4.5.1 கடல் வளங்களைப் பாதுகாத்தல்
92. புவி மற்றும் மனித குலத்தின் உயிரோட்டமாக விளங்குவது?
விடை: பெருங்கடல்கள்
93. புவியில் மனித குலத்தின் வாழ்வாதாரம் எதை சார்ந்துள்ளது?
விடை: கடல் வளங்களை சார்ந்துள்ளது.
94. புவியில் பொருளாதார மேம்பாடு, சமூக நலவாழ்வு மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றிற்கு தேவைப்படுவது?
விடை: கடல் வளம்
95. புவியின் பெருங்கடல்களில் அதிகமாகக் காணப்படுபவை?
விடை: எண்ணெய் வளங்கள்
96. புவியில் பெருங்கடல்களின் பயன்பாடுகள்?
விடை: முக்கிய மீன்பிடித்தளமாகத் திகழ்வதுடன், மரபுசாரா எரிசக்தியை உற்பத்தி செய்யவும் சிறிய மற்றும் பெரிய துறைமுகங்களின் வர்த்தக மேம்பாட்டிற்கும் பெருமளவில் உதவுகின்றன.
97. உலகம் முழுவதும் உள்ள மக்களைத் தன்பால் ஈர்த்துப் பல நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தன் பங்களிப்பை வழங்குவது?
விடை: கடற்கரைச் சுற்றுலா.
98. புவியில் தென் அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகும் நீரோட்டத்தின் பெயர்?
விடை: பென்குலா நீரோட்டம் (குளிர்)
99. புவியில் தென் அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகும் பென்குலா நீரோட்டத்தின் விளைவுகள்?
விடை: நமீபியா கடற்கரையோரப்
பகுதிகளைப் பனிமூட்டமாக இருக்கச் செய்கிறது. நமீபியா மற்றும் கலகாரி பாலைவனங்கள் வளர்ச்சியடைய உதவுகிறது.
100. புவியில் வட அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகும் நீரோட்டங்கள் எவை?
விடை:
வளைகுடா நீரோட்டம் (வெப்பம்)
வட அட்லாண்டிக் நீரோட்டம் (வெப்பம்)
லாப்ரடார் நீரோட்டம் (குளிர்)
கேனரி நீரோட்டம் (குளிர்)